தமிழகத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் “உழவர் உதவி மைய” வாட்ஸ்அப் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2026–2027-ம் ஆண்டு கொள்முதல் பருவத்திற்காக மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து, தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி, சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.156-ல் இருந்து ரூ.289-ஆகவும், பொதுரக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.131-ல் இருந்து ரூ.159-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 2026 செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடப்பு கொள்முதல் பருவம் தொடங்கியது. செப்டம்பர் 3-ம் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் திட்டத்தை வெளிப்படையாகவும் பொறுப்புடனும் செயல்படுத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) அடங்கிய அரசாணையை தமிழக அரசு செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவத்தில் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,750-க்கும், பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,600-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் 3-ம் தேதி முதல் இதுவரை டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் எவ்வித சிரமமும் இன்றி நெல்லை விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பதாகவோ, பணம் வசூலிப்பது தொடர்பாகவோ புகார்கள் இருந்தால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் “உழவர் உதவி மைய” வாட்ஸ்அப் எண்ணான 9500801465-ல் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.