கொரோனா தடுப்பூசி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற மன்சூர் அலிகான், அப்போது செய்தியாளர்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகானின் கருத்துகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாக இருப்பதாகவும், அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் எதிராக இருப்பதாகவும் கூறி, கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், தொற்று நோயை பரப்பும் நோக்கத்துடன் செயல்படுதல், தவறான தகவல்களை மக்களிடம் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய பேட்டி தொடர்பான புகாரை போலீஸார் உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், தடுப்பூசி குறித்து அவதூறான தகவல்களை தான் பரப்பவில்லை என்றும், தனது பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.