கொடைரோடு அருகே தி.மு.க. பிரமுகர் படுகொலை: 3 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கொடைரோடு அருகே தி.மு.க. பிரமுகர் படுகொலை: 3 பேர் கைது

கொடைரோடு அருகே தி.மு.க. பிரமுகர் படுகொலை: 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தி.மு.க. பிரமுகர் லட்சுமணன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மகனை தாக்க முயன்ற கும்பல் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நாகையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (55). தி.மு.க. பிரமுகரான இவருக்கு உதயகுமார் (30) என்ற மகன் உள்ளார். லட்சுமணனுக்கும், அருகிலுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த அஜித் (27) என்பவருக்கும் இடையே பணம் தொடர்பான பரிவர்த்தனையில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் கொடைரோடு அருகே கொழிஞ்சிபட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற உதயகுமாரை, அங்கிருந்த 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார், அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து தனது தந்தை லட்சுமணனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்த உதயகுமார், அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். தந்தையை வழிமறித்து கொலை அப்போது நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தில் இருந்த லட்சுமணன், மகனின் தகவலைத் தொடர்ந்து நாகையகவுண்டன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் சில்லலபட்டி அருகே சென்றபோது, காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அதே கும்பல் அவரை வழிமறித்தது. தொடர்ந்து, கும்பலை சேர்ந்தவர்கள் பட்டா கத்தியால் லட்சுமணனை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை சிதைக்கப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவல் கிடைத்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமணனின் உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு கொலை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், லட்சுமணனுக்கும் அஜித்துக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் லட்சுமணன், அவரது மகன் உதயகுமார் ஆகியோர் ஒருபுறமும், அஜித் மற்றும் அவரது தரப்பினர் மறுபுறமும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித், லட்சுமணனை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, அஜித்தின் தூண்டுதலின்பேரில் அவரது தரப்பை சேர்ந்த 3 பேர் முதலில் உதயகுமாரை தாக்க முயன்றுள்ளனர். அந்த முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, லட்சுமணனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மீனாட்சிபுரத்தை சேர்ந்த பிச்சைமுத்து (30), வாசு (26) மற்றும் ஜல்லிப்பட்டியை சேர்ந்த கலைஞர் என்ற ரஞ்சித்குமார் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கொடைரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.