கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் அதி கனமழையால், சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்குத் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தற்காலிகத் தடை விதித்துள்ளன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகளில் பனிமூட்டம் அதிகரித்துள்ளதுடன், பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்படவும், மரங்கள் முறிந்து விழவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தை இணைக்கும் கொடைக்கானல் – அடுக்கம் மலைப்பாதை போக்குவரத்துக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது வத்தலக்குண்டு மலைப்பாதை வழியாக அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மழையின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், மறு அறிவிப்பு வெளியாகும் வரை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஏற்கெனவே கொடைக்கானலில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளும், அப்பகுதி மக்களும் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, அருவிகள் மற்றும் பாதுகாப்பற்ற மலை விளிம்புப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.