கொடுத்த கடனைத் திரும்பக் கேட்ட பேராசிரியர் கழுத்தை நெரித்துக் கொலை – தம்பதி கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கொடுத்த கடனைத் திரும்பக் கேட்ட பேராசிரியர் கழுத்தை நெரித்துக் கொலை – தம்பதி கைது

கொடுத்த கடனைத் திரும்பக் கேட்ட பேராசிரியர் கழுத்தை நெரித்துக் கொலை – தம்பதி கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, கொடுத்த கடனைத் திரும்பக் கேட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பெண் பேராசிரியர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாலத்தின் அடியில் வீசப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். துறையூர் அருகே கீரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா (36). கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த இவர், காளிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும், தனக்குத் தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதுடன், சீட்டும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், துறையூர் கண்ணனூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுமதி - துரைராஜ்தம்பதியிடம் சுகன்யா பணம் கொடுத்திருந்தார். கடந்த 20-ந்தேதி, கடன் மற்றும் சீட்டுப் பணத்தை வசூலிப்பதற்காக அவர்களது வீட்டுக்கு சுகன்யா சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சுமதி மற்றும் துரைராஜ், சுகன்யாவை இரும்புக் கம்பியால் தாக்கி, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, கரட்டாம்பட்டி அருகேயுள்ள பாலத்தின் அடியில் அவரது உடலை வீசிவிட்டு இருவரும் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. சுகன்யா வீடு திரும்பாததால் அவரது தந்தை மனோகரன் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே, கடந்த 24-ந்தேதி கரட்டாம்பட்டி பாலத்தின் கீழ் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் புலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் கிடந்த சுகன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சுமதி - துரைராஜ் தம்பதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், கடனை திரும்பக் கேட்டதால் இருவரும் சேர்ந்து சுகன்யாவை கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த புலிவலம் போலீசார் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சுகன்யா காணாமல் போனது தொடர்பாக அவரது தந்தை புகார் அளிக்கச் சென்றபோது துறையூர் காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தினேஷ், இது எல்லைப் பிரச்சினை எனக் கூறி புகாரை பெறாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடமையில் அலட்சியம் காட்டியதாக கூறப்படும் துறையூர் காவல் உதவி ஆய்வாளர் தினேஷை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.