2025-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்கினார். இதில், நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. அதேவேளையில், பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 17 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர், செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக், கிராண்ட்மாஸ்டர் விதித் சந்தோஷ் குஜராத்தி உள்ளிட்டோர் அர்ஜுனா விருதைப் பெற்றனர். மேலும், கால்பந்து விளையாட்டில் நீண்டகாலப் பங்களிப்பை வழங்கிய ஐ. அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. அர்ஜுனா விருது பெற்ற 17 பேர் விவரம்: - புல்லேலா காயத்ரி கோபிசந்த் – பேட்மிண்டன் - விதித் சந்தோஷ் குஜராத்தி – செஸ் - திவ்யா ஜிதேந்திர தேஷ்முக் – செஸ் - தனுஷ் ஸ்ரீகாந்த் – துப்பாக்கி சுடுதல் - ருத்ரான்ஷ் கண்டேல்வால் – பாரா துப்பாக்கி சுடுதல் - அகில் ஷியோரன் – துப்பாக்கி சுடுதல் வீரர்களின் சாதனைகள்: கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் செஸ் உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் திவ்யா தேஷ்முக் புதிய வரலாறு படைத்தார். இத்தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றார். விதித் குஜராத்தி, 2024-ம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் முக்கிய இடம்பெற்றிருந்தார். தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெகத்லான் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தொடர்ந்து, 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மேலும், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டெகத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கமும், அய்ச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெண்கலப் பதக்கமும் வென்று சாதித்தார். இதற்கிடையே, 1962-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த ஐ. அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. கேல் ரத்னா விருது வழங்கப்படாதது ஏன்? இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு எந்த வீரர் அல்லது வீராங்கனையும் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த உயரிய விருது யாருக்கும் வழங்கப்படாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும். பயிற்சியாளர்களுக்கும் விருதுகள்: சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. தடகளப் பயிற்சியாளர் பர்வீர் சிங், குத்துச்சண்டைப் பயிற்சியாளர் சோட்டே லால் யாதவ், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் நேஹா சவான் ஆகியோர் இந்த விருதைப் பெற்றனர். அதேபோல், வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சார்யா விருது குத்துச்சண்டைப் பயிற்சியாளர் தர்மேந்திர சிங் யாதவ் மற்றும் மல்யுத்தப் பயிற்சியாளர் வீரேந்தர் குமார் ஆகியோருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.