தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நண்பர்களிடையே ஏற்பட்ட கேலி, வாக்குவாதமாக மாறியதில், ஆத்திரமடைந்த ஒருவர் தனது நண்பரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர் அங்குள்ள தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை காளிராஜும் அவரது நண்பர்களும் திட்டங்குளம் தினசரி சந்தை வளாகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தொடங்கிய சாதாரண பேச்சு, ஒருவரையொருவர் கேலி செய்யும் நிலைக்குச் சென்றது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்தது. அப்போது ஆத்திரமடைந்த அயோத்தி என்ற நபர், தான் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து காளிராஜைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த காளிராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அயோத்தி அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், காளிராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அயோத்தியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்தபோது அங்கிருந்தவர்களிடமும், சந்தையில் பணிபுரியும் தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களிடையே ஏற்பட்ட கேலி, கொலையில் முடிந்த சம்பவம் திட்டங்குளம் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.