கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மலையிலிருந்து உருண்டு விழுந்த பாறையில் சிக்கி 59 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் கடமக்குழி பகுதியைச் சேர்ந்தவர் செபாஸ்டியன் (59). இவர் இன்று காலை தனது மனைவியுடன் சொந்தத் தோட்டத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள மலையின் உச்சியிலிருந்து திடீரென பெரிய பாறை ஒன்று உருண்டு வந்தது. இதைக் கண்ட செபாஸ்டியனும் அவரது மனைவியும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், செபாஸ்டியன் சென்ற திசையை நோக்கி பாறை வேகமாக உருண்டு வந்தது. இதனால், அருகிலிருந்த தண்ணீர் தொட்டிப் பகுதியில் நின்ற செபாஸ்டியன் மீது பாறை விழுந்தது. இதில் அவர் பாறைக்கும் தண்ணீர் தொட்டிக்கும் இடையே சிக்கிக்கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு செபாஸ்டியனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் செபாஸ்டியனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.