கேரளாவின் பாரம்பரிய திருவிழா ‘ஓணம் பண்டிகை’
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கேரளாவின் பாரம்பரிய திருவிழா ‘ஓணம் பண்டிகை’

கேரளாவின் பாரம்பரிய திருவிழா ‘ஓணம் பண்டிகை’

கேரள மக்கள் சாதி, மதம், இனம் உள்ளிட்ட வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான பாரம்பரிய விழா ஓணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகாபலி சக்கரவர்த்தி தனது மக்களை காண பூமிக்கு வருவார் என்பது கேரள மக்களின் நம்பிக்கை. அவரை வரவேற்கும் விதமாகவே ஓணம் கொண்டாடப்படுகிறது.ஓணம் காலத்தில் கேரளம் முழுவதும் புத்தாடைகள் அணிவது, வீட்டு வாசல்களில் பூக்கோலம் அமைப்பது, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, பாரம்பரிய உணவுகள் மற்றும் பலகாரங்களை தயாரிப்பது என விழாக்கோலம் பூணும். கேரளத்தைத் தவிர தென்தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.மகாபலி சக்கரவர்த்தியின் கதைகேரளத்தை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தி அசுர குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனது மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது ஆட்சியில் பசி, வறுமை, அநீதி போன்றவை இல்லாமல் மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அனைவரையும் சமமாக நடத்தி வந்த அவரது புகழ் மூவுலகிலும் பரவியது.தர்மம் மற்றும் கொடையில் சிறந்து விளங்கிய மகாபலி, பின்னர் மூவுலகையும் ஆட்சி செய்யத் தொடங்கினார். இதனால், தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற எண்ணம் அவரிடம் உருவானதாக புராணக் கதை கூறுகிறது.மகாபலியின் செல்வாக்கு அதிகரித்ததைக் கண்டு தேவர்கள் அச்சமடைந்தனர். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். இதற்கிடையில், தனது குருவான சுக்ராச்சாரியாரின் ஆசீர்வாதத்துடன் மகாபலி ஒரு பெரிய யாகத்தை நடத்தினார். யாகம் நிறைவடையும் நேரத்தில் தானம் கேட்டு வருபவர்களுக்கு எதையும் மறுக்காமல் வழங்குவது அவரது வழக்கமாக இருந்தது.அப்போது மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில், சிறுவனின் குள்ள வடிவில் யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட மகாபலி, என்ன தானம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு வாமனர் மூன்று அடி நிலம் மட்டுமே வேண்டும் எனக் கேட்டார்.இதைக் கேட்ட மகாபலி அதை எளிதான தானமாகக் கருதி சம்மதிக்கத் தயாரானார். ஆனால், வந்திருப்பவர் சாதாரண சிறுவன் அல்ல; மகாவிஷ்ணுவே வாமன வடிவில் வந்துள்ளார் என்பதை சுக்ராச்சாரியார் மகாபலிக்கு எடுத்துரைத்தார். எனவே, அந்தத் தானத்தை வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.எனினும், யாகம் நிறைவடையும் தருவாயில் கொடுத்த வாக்கை மீற மகாபலி விரும்பவில்லை. வாமனர் கேட்ட மூன்று அடி நிலத்தை வழங்குவதாக உறுதி அளித்தார். உடனே வாமனர் தனது குள்ள உருவத்தை மாற்றி, பூமியையும் வானத்தையும் எட்டும் அளவுக்கு பிரமாண்டமான உருவம் எடுத்தார்.முதல் அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று வாமனர் கேட்டபோது, மகாபலி தனது தலையைத் தாழ்த்தி, அதில் வைக்குமாறு கூறினார். வாமனர் அவரது தலையில் மூன்றாவது அடியை வைத்ததும், மகாபலி பாதாள உலகத்திற்குச் சென்றதாக புராணம் கூறுகிறது.மகாபலியின் நல்ல குணங்கள், கொடை மனப்பான்மை மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய பண்பு ஆகியவற்றை பாராட்டிய மகாவிஷ்ணு, அவருக்கு ஒரு வரம் வழங்க முன்வந்தார். அதற்கு மகாபலி, தனது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை ஆண்டுக்கு ஒருமுறையாவது நேரில் வந்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். மகாவிஷ்ணுவும் அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.இதன்படி, ஆவணி மாத திருவோண நாளில் மகாபலி தனது மக்களை சந்திக்க பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே கேரள மக்கள் ஓணத்தை கொண்டாடுகின்றனர்.பத்து நாட்கள் களைகட்டும் கொண்டாட்டம்கேரளாவில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை தொடர்ந்து பத்து நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஓண சத்யா, படகுப் போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், யானை ஊர்வலங்கள், ஓண ஊஞ்சல் உள்ளிட்டவை விழாவின் முக்கிய நிகழ்வுகளாக உள்ளன.மகாபலி மன்னனை வரவேற்கும் அடையாளமாக வீடுகளின் வாசலில் அமைக்கப்படும் அத்தப்பூக்கோலம் ஓணத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். முதல் நாளில் ஒரு வகை பூ, இரண்டாவது நாளில் இரண்டு வகை பூக்கள் என ஒவ்வொரு நாளும் பூக்களின் வகைகள் அதிகரித்துச் செல்கின்றன. பத்தாவது நாளில் பத்து வகையான பூக்களைக் கொண்டு பெரிய அளவில் பூக்கோலம் அமைக்கப்படுகிறது.தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ உள்ளிட்ட மலர்களுக்கு அத்தப்பூக்கோலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.அறுவடை மற்றும் ஒற்றுமையின் விழாஇயற்கைக்கும் விவசாயத்திற்கும் நன்றி செலுத்தும் அறுவடைத் திருநாளாகவும் ஓணம் கருதப்படுகிறது. மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடுவதால், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் பண்டிகையாகவும் இது திகழ்கிறது.