ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டேவில் சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். கேப் வெர்டே நாட்டின் பகொ தீவில் உள்ள ஷடஸ் கல்டிரஸ் பகுதியில் 32 பேர் ஆம்னி பஸ் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் இடம்பெற்றிருந்தனர். மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் சம்பவ இடத்திலேயே அல்லது விபத்தின் காரணமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேரை மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.