கூட்டணியை காப்பாற்ற காவிரியை விட்டுக்கொடுக்கப் போகிறீர்களா? முதல்-அமைச்சர் விஜய்க்கு டி.ஆர்.பி. ராஜா கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கூட்டணியை காப்பாற்ற காவிரியை விட்டுக்கொடுக்கப் போகிறீர்களா? முதல்-அமைச்சர் விஜய்க்கு டி.ஆர்.பி. ராஜா கேள்வி

கூட்டணியை காப்பாற்ற காவிரியை விட்டுக்கொடுக்கப் போகிறீர்களா? முதல்-அமைச்சர் விஜய்க்கு டி.ஆர்.பி. ராஜா கேள்வி

காவிரி நீர் உரிய காலத்தில் கிடைக்காவிட்டால், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கூட்டணியைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தின் காவிரி நீருரிமையை விட்டுக்கொடுக்கப் போகிறீர்களா என முதல்-அமைச்சர் விஜய்க்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பதிவில் டி.ஆர்.பி. ராஜா கூறியிருப்பதாவது: தமிழகத்தின் நலனுக்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். காவிரி நதி கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் திருத்தி உறுதி செய்துள்ளது. அதன்படி, பிலிகுண்டுலு வழியாக ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வேண்டியது சட்டப்பூர்வமான உரிமையாகும். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் எந்தவித நிபந்தனையற்ற அனுமதியும் வழங்கவில்லை. எனவே, காவிரி நீர் தொடர்பாக தமிழகத்திற்கு உள்ள சட்டரீதியான உரிமைகள் வலுவாக உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் தண்ணீர் வந்து சேராவிட்டால், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். விவசாயப் பருவம் முடிந்த பின்னர் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் விவசாயிகளுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக உள்ள காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் மேகதாது அணைத் திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தின் நீராதார உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், தவெக அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கப்போகிறார்களா அல்லது கர்நாடகாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கப்போகிறார்களா? காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தின் காவிரி நீருரிமையைப் பாதிக்கும் இந்த அணைத் திட்டத்திற்கு எதிராகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். முதல்-அமைச்சர் விஜய், அரசியல் கூட்டணியைத் தக்கவைப்பது முக்கியமா அல்லது தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது முக்கியமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். இதற்கான திருத்தமும் சட்டமன்றத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், டெல்டா பகுதி விவசாயிகளை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை தவெக அரசு எப்போது மேற்கொள்ளும்? மேலும், தமிழக விவசாயிகளின் நலனையும், மாநிலத்தின் சட்டப்பூர்வமான காவிரி நீர்ப் பங்கையும் பாதுகாக்க பிரதமர் மோடி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தின் காவிரி நீருரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாது. இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.