தமிழக மக்களாலும், குறிப்பாக கரூர் மாவட்ட மக்களாலும் எளிதில் மறக்க முடியாத நாளாக செப்டம்பர் 27 மாறியுள்ளது. அந்த நாளில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம், ஏராளமானோரின் மனதில் ஆறாத சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த விஜய், கடந்த 2023-ம் ஆண்டு தமிழகவெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கினார். தொடர்ந்து பல்வேறு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தார். அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி கரூர் மாநகரில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை நேரில் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலை முதலே திரளத் தொடங்கினர். விஜய்யை வரவேற்கும் வகையில் அங்கு பாடல்கள் ஒலிக்கப்பட்டன. பலர் உற்சாகமாக நடனமாடியபடி காத்திருந்தனர். திரைப்படங்களில் பார்த்த விஜய்யை நேரில் காணும் ஆவலுடன் 2 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். ஆனால், தங்களுக்கு ஒரு மிகப்பெரிய துயரம் காத்திருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு இரவு 7 மணியளவில் விஜய் வேலுச்சாமிபுரத்திற்கு வந்தார். அவர் மக்கள் மத்தியில் தனது பிரசாரத்தை தொடங்கியதும், அவரை நெருக்கமாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கூட்டத்தில் பலரும் முன்னேற முயன்றனர். இதனால் அங்கு திடீரென கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டதால் பலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். கூட்டத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பொதுமக்களும் போலீசாரும் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. நேரம் செல்லச் செல்ல பலி எண்ணிக்கையும் அதிகரித்தது. இறுதியில் இந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கரூர் நகரமே சோகத்தில் மூழ்கியது. 41 என்ற எண்ணிக்கை கரூரின் துயர வரலாற்றில் அழியாத நினைவாக பதிந்தது. இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் சம்பவம் குறித்து வெவ்வேறு கருத்துகளை தெரிவித்தனர். ஆனால் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பை எளிதில் மறக்க முடியாது. குறிப்பாக, அங்கு ஒலித்த பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய 2 வயது குழந்தை துரு விஷ்ணுவும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அப்போதைய தமிழக அரசு, த.வெ.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து ஓராண்டு கடந்துவிட்டாலும், அதன் வலி இன்னும் கரூர் மக்களின் மனதில் நீங்கவில்லை. அந்த சம்பவம் அப்பகுதி மக்களின் நினைவில் ஆறாத வடுவாகவே உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 10-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் பேசினார். அப்போது, கூட்ட நெரிசல் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக த.வெ.க. சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, விரைவில் அங்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.