சென்னை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், நான்காவது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் ரெயில்களை இயக்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய வழித்தடமாக தாம்பரம் – செங்கல்பட்டு ரெயில் பாதை விளங்குகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்களும், 250-க்கும் அதிகமான மின்சார ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மூன்று ரெயில் பாதைகள் மட்டுமே இருப்பதால், கூடுதல் ரெயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் சிரமம் நிலவுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்காவது ரெயில் பாதை அமைக்க தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது. ரூ.1,165 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரெயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, முதல் கட்டமாக கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலான பகுதியில் பணிகளை மேற்கொள்ள ரூ.273 கோடிக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், நான்காவது ரெயில் பாதை அமைப்பதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தனர். ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரையிலான 9 கிலோமீட்டர் தூரத்துக்கு நான்காவது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்தால், தற்போதைய அளவைவிட 25 சதவீதம் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பயனடைவதுடன், பண்டிகைக் காலங்களில் கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்கவும் வாய்ப்பு ஏற்படும். இந்தத் திட்டம் ரெயில் பயணிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.