தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நடைபெற உள்ள தசரா திருவிழாவை முன்னிட்டு, திருவிழா ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தசரா திருவிழா ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் கள்ளச்சாராயத் தடுப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் முன்னிலை வகித்தார். குலசேகரப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்தை சீராக இயக்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை தொடர்ந்து பாதுகாப்பதுடன், சாலை விபத்துகளைத் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க கண்காணிப்பை அதிகரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல், மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் எல்லைச் சாவடிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.