வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதிகளில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பின்னர் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல், தென்காசி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக ஐந்தருவியில் உள்ள 5 கிளைகளிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டியதால், நேற்று மாலை 6 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்ததால், இரவு 8 மணி முதல் அங்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், தற்போது நீர்வரத்து சீராகியுள்ளதால், இன்று காலை முதல் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் குளித்து வருகின்றனர்.