குரூப் 4 தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி வாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
11 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குரூப் 4 தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி வாய்ப்பு

குரூப் 4 தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள இன்று (நவம்பர் 11) கடைசி நாளாகும். 2026-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு தேர்வு அட்டவணையில், குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த அக்டோபர் 6-ம் தேதி மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டு, விண்ணப்பப் பதிவையும் தொடங்கியது. இதில் 291 கிராம நிர்வாக அலுவலர்கள், 3,798 இளநிலை உதவியாளர்கள், 107 வரி வசூலிப்பவர்கள், 97 வரி தண்டலர்கள், 1,572 தட்டச்சர்கள், 404 சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 60 நேர்முக எழுத்தர்கள், 40 வனக் காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், முதுநிலை ஆய்வக உதவியாளர், பதிவுறு எழுத்தர், விற்பனை உதவியாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 5-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பை அரசு உயர்த்தியது. இதனால், புதிய வயது வரம்பின் அடிப்படையில் தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் வகையில், விண்ணப்பக் காலக்கெடுவை நவம்பர் 8-ம் தேதி வரை நீட்டித்து டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. விண்ணப்பப் பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஒரு பணியிடத்துக்கு சராசரியாக 226 பேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. நவம்பர் 4-ம் தேதி வரை 9.80 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில், அடுத்த நான்கு நாட்களில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பப் பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு நவம்பர் 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அந்த வகையில், விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கடைசி நாள் இன்று என்பதால், இதுவரை திருத்தம் செய்யாதவர்கள் இன்றைக்குள் அந்தப் பணியை முடிக்க வேண்டும். இதற்கிடையே, குரூப் 4 எழுத்துத் தேர்வு 2027-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் தேர்வு, பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.