குரூப்-4 தேர்வு: காலிப்பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குரூப்-4 தேர்வு: காலிப்பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

குரூப்-4 தேர்வு: காலிப்பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

தமிழகத்தில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பில் குறைந்த எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதற்கு எஸ்டிபிஐ கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. தேர்வுக்குத் தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செயல் தலைவர் அச. உமர் பாரூக் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 46 வகையான பணிகளுக்கு குரூப்-4 தேர்வு மூலம் 6,574 பேரைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குரூப்-4 பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், 2026ஆம் ஆண்டில் இவ்வளவு குறைவான இடங்களை மட்டுமே நிரப்பத் திட்டமிட்டிருப்பது, அரசுப் பணியை எதிர்பார்த்து இரவு பகலாகப் படித்து வரும் இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், தமிழக அரசுத் துறைகளில் 6 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. இத்தகைய சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. காலிப்பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதால், ஏற்கெனவே பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு சேவைகளும் தாமதமடைகின்றன. எனவே, அரசுப் பணிக்காகத் தயாராகும் இளைஞர்களின் எதிர்காலத்தையும், அரசுத் துறைகளின் செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு, குரூப்-4 பிரிவில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களில் குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவீத இடங்களையாவது உடனடியாக நிரப்பும் வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயல் தலைவர் அச. உமர் பாரூக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.