தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள குரூப்-4 தேர்வில், 6,574 காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பணியிடத்துக்கு 226 பேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. அக்டோபர் 6-ல் வெளியான அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட 2026-ம் ஆண்டுக்கான ஆண்டு தேர்வு அட்டவணையில், குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த அக்டோபர் 6-ம் தேதி மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டு, விண்ணப்பப் பதிவையும் தொடங்கியது. இதில் 291 கிராம நிர்வாக அலுவலர், 3,798 இளநிலை உதவியாளர், 107 வரி வசூலிப்பவர், 97 வரி தண்டலர், 1,572 தட்டச்சர், 404 சுருக்கெழுத்து தட்டச்சர், 60 நேர்முக எழுத்தர், 40 வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், முதுநிலை ஆய்வக உதவியாளர், பதிவுறு எழுத்தர், விற்பனை உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணிகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு முதலில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாக நவம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளில் விண்ணப்பிப்பதற்கான உச்ச வயது வரம்பை அரசு உயர்த்தியது.இதனால், வயது வரம்பு உயர்வின் மூலம் பயன்பெறும் தேர்வர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 8-ம் தேதி வரை நீட்டித்து டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. ஒரு இடத்துக்கு 226 பேர் போட்டி குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், ஒவ்வொரு பணியிடத்துக்கும் சராசரியாக 226 பேர் போட்டியிடுகின்றனர். நவம்பர் 4-ம் தேதி நிலவரப்படி 9.80 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அதன்பிறகு, கடைசி 4 நாட்களில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நவம்பர் 11-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.குரூப்-4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 2027-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.