நடிகர்கள் ஜெயராம், அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளன. மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 11-ம் தேதி சென்னை டி ஸ்டுடியோவில் பாரம்பரிய முறைப்படி பூஜை நடத்தப்பட்டு டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து நடிகர் அஸ்வின் தனது கதாபாத்திரத்திற்கான குரல் பதிவுப் பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இணைத் தயாரிப்பாளர் சாய் பிரபு ஜெயக்குமார் மற்றும் இயக்குநர் நாகேந்திர முருகன் ஆகியோர் பங்கேற்றனர். இப்படத்தின் மூலம் நாகேந்திர முருகன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். குடும்ப உறவுகள், அன்பு, பாசம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை மற்றும் மனதைத் தொடும் தருணங்களுடன் அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தின் வசனங்களை பிரபல இயக்குநர் பாண்டிராஜ் எழுதியுள்ளார். கல்யாணி அனில் கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்துக்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சுவாரஸ்யமான தருணங்கள் அடங்கிய சிறப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது படத்தொகுப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனுடன் டப்பிங் பணிகளும் தொடங்கியுள்ளதால், படத்தின் அடுத்தகட்ட வேலைகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே, படத்தின் விளம்பர அறிவிப்புகள் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.