வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பஞ்சமி நிலங்கள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய குடியரசு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பஞ்சமி நிலங்களை பட்டியலின மக்கள் வாங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும், அதேநேரத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறுக்கு வழிகளில் பஞ்சமி நிலங்களை பதிவு செய்வதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதிதாக பட்டா வழங்குவதில்லை என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு மின் இணைப்பு, பதிவு உள்ளிட்டவற்றுக்காக தடையில்லா சான்றிதழ் கேட்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களை ‘அ’ பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியாத்தம் அருகே உள்ள பிச்சனூர், கல்லேரி கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆதிதிராவிடர் அருந்ததியர் மக்களுக்கு சுமார் 230 பட்டாக்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அந்த இடங்களில் சாலை அமைத்து, நிலங்களை அளந்து பயனாளிகளிடம் ஒப்படைக்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லை என நகர போலீசார் தெரிவித்த போதிலும், இராசி தலித் குமார் தலைமையில் போராட்டம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இராசி தலித் குமார், வேலூர் மாவட்ட துணைத் தலைவர் மது, வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. கார்த்திகேயன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.