புதுச்சேரி ஏம்பலத்தில் உள்ள கைலாசா நித்யானந்தா தியான பீடத்தில் குடமுழுக்கு விழா நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக, தியான பீட நிர்வாகிகள் நேற்று புதுச்சேரி சட்டசபையில் முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வர இருப்பதாக நிர்வாகிகள் முதல்-மந்திரியிடம் தெரிவித்தனர். அவரது வருகை தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினர். நித்யானந்தா புதுச்சேரிக்கு வரும்போது, அவருக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதிலளித்த ரங்கசாமி, “அவர் வரட்டும், பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. சந்திப்பின்போது, கைலாசா தொடர்பான தகவல்கள் இடம்பெற்ற புத்தகம் ஒன்றையும் தியான பீட நிர்வாகிகள் முதல்-மந்திரியிடம் வழங்கினர்.பல்வேறு வழக்குகள் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தா, கடந்த 2020-ம் ஆண்டு ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அவர் புதுச்சேரிக்கு வர உள்ளதாக தியான பீட நிர்வாகிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.