திருச்சி குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என்றும், கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி, அவர் மீண்டும் நினைவூட்டல் கடிதம் அளித்துள்ளார். இதுகுறித்து மறுமலர்ச்சி திமுகவைச் சேர்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன் குடமுருட்டி ஆற்றில் புதிய உயர்மட்டப் பாலம்: திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி - கரூர் சாலையில், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே 1872-ம் ஆண்டு செங்கற்களால் கட்டப்பட்ட பழமையான பாலம் ஒன்று உள்ளது. திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருக்கும் இந்தப் பாலம், தற்போது வெறும் 7 மீட்டர் அகலத்திலேயே அமைந்துள்ளது. நீண்டகாலப் பயன்பாட்டால் பாலத்தின் கட்டமைப்பு பழுதடைந்துள்ளதுடன், மழைக்காலங்களில் குடமுருட்டி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதாலும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தைக் கருத்தில் கொண்டு புதிய உயர்மட்டப் பாலம் அமைப்பது அவசியமாகிறது. இதற்காக, தற்போதுள்ள பாலத்தின் வலதுபுறத்தில் சுமார் ரூ.25 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைவாகத் தயாரித்து, நிர்வாக ஒப்புதல் பெற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினேன். கோவில்பட்டி அரசு மருத்துவமனை சாலைகள் சீரமைப்பு: கடந்த 25.06.2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து மற்ற வார்டுகளுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டேன். இதனால் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சாலைகளைச் சீரமைப்பதற்கான நிதி மதிப்பீட்டை பொதுப்பணித்துறை தயாரித்துள்ளது. மேலும், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) மூலம் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பவுண்டேஷனுக்கும் திட்ட முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி கடந்த 25.07.2026 அன்று அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தேன். அப்போது, மூன்று மாதங்களுக்குள் பணிகள் தொடங்கப்படும் என அவர் உறுதியளித்திருந்தார். தற்போது, இரு திட்டங்களிலும் பணிகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி அமைச்சரிடம் நினைவூட்டல் கடிதம் வழங்கியுள்ளேன். இவ்வாறு துரை வைகோ தனது பதிவில் தெரிவித்துள்ளார்.