சென்னை கீழ்ப்பாக்கத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கல்லூரி மாணவி, பெண் மேக்கப் கலைஞர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண்களைப் போதைக்கு அடிமையாக்கி, அவர்களைப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுத்தியதாகவும் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகே போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமையான இன்று அப்பகுதிக்குச் சென்ற போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த ஓர் ஆண் மற்றும் இரண்டு இளம் பெண்களைப் பிடித்து சோதனையிட்டனர். இதில், விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது. இதனைத் தொடர்ந்து, போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக மூவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் போதைப்பொருள்களை சென்னைக்குக் கடத்தி வந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இளம் பெண்களை முதலில் போதைப் பழக்கத்திற்கு உள்ளாக்கி, பின்னர் அவர்களைப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் முகவர்களாகப் பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் கீழ்ப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.