சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுகள், அங்கு வாழ்ந்த மக்களின் சிறப்பான நீர் மேலாண்மை முறைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இதுவரை நடைபெற்ற பல்வேறு கட்ட அகழாய்வுகளில் 2 முதல் 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை குடிநீர், பாசனம் மற்றும் சாயத்தொழில் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.தற்போது நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், ஒரே குழிக்குள் அடுத்தடுத்து மூன்று வகையான வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஏற்கனவே 2 அடுக்குகள் கொண்ட ஒரு உறைகிணறும் கண்டறியப்பட்டது.இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள மற்றொரு உறைகிணற்றில் 8 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன. இந்த உறைகிணறு எந்தவித சேதமும் இன்றி காணப்படுவதால், இதற்கு கீழும் மேலும் சில அடுக்குகள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அதன் முழு அமைப்பையும் அறியும் வகையில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.