பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இது கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி உள்ளிட்ட பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியுடன் ரோகிணி நட்சத்திரம் இணையும் நாளில் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் சேரும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திட வேண்டும் எனக் கூறி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.அநீதிக்கு எதிராக அறம் வெற்றி பெறும் என்பதையும், எந்தச் சூழ்நிலையிலும் கடமையில் இருந்து விலகாமல் செயல்பட வேண்டும் என்பதையும் ஸ்ரீகிருஷ்ணர் போதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தர்மத்தின் பாதையில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி, உயர்ந்த வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் செழிக்கும் நல்லுலகை உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.