கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த தர்மபுரி மாவட்டம் பெல்ராம்பட்டியைச் சேர்ந்த சாரதிகுமார் (25), பஞ்சப்பள்ளி தின்னூரைச் சேர்ந்த அக்மல் பாபுபாய் (28), அனுமந்தபுரம் அருகே ஜம்பூத் பகுதியைச் சேர்ந்த காவேரி (32) ஆகிய 3 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். தொட்டியை சுத்தம் செய்தபோது விபத்து தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி, நேற்று மாலை 3 தொழிலாளர்களும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மயங்கி தொட்டிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விஷவாயு தாக்கியதாக போலீசார் விசாரணை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ராயக்கோட்டை போலீசார் தொழிற்சாலைக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலால் மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வெளியேறுவதைத் தடுப்பதற்காக தொழிற்சாலையில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அந்த ரசாயனத்தின் காரணமாக விஷவாயு உருவாகியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.