ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 6.10.2025 அன்று விபசார தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். தனது அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத ஒருவர் பென்டிரைவ் ஒன்றை கொண்டு வந்து கொடுத்ததாகவும், அதில் தொழிலதிபர் வீரமணி சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபடும் காட்சிகள் இருப்பதாக அந்த நபர் தெரிவித்துச் சென்றதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் பென்டிரைவில் இருந்த வீடியோவை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, 7.10.2025 அன்று சென்னை மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், வீரமணி சாந்தி என்ற பெண்ணுக்கு தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கொடுத்திருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த வீட்டில் சாந்தியும் அவரது கணவர் மகேந்திர சிம்கனும் சிறுமிகளை வீரமணியிடம் அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனைகளில் வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வீடியோ பதிவுகள், சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமிகளை அழைத்து வந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் மகேந்திர சிம்கனும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் கீதாஞ்சலி மற்றும் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரணையை தீவிரப்படுத்தினர். குறிப்பாக, புகாரில் குறிப்பிடப்பட்ட பென்டிரைவில் இடம்பெற்றிருந்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் தொடர்பான தகவல்களை போலீசார் சேகரிக்கத் தொடங்கினர். இதனிடையே, நீதிமன்ற அனுமதியுடன் வீரமணியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 80 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவரை சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்து விசாரணை நடத்த முடியாத நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையிலேயே விசாரணை நடத்தப்பட்டது. கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை துணை கமிஷனர் கீதாஞ்சலி மற்றும் உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆசிரமங்களை தொடங்கி ஏழை மாணவிகளின் கல்விக்கு நிதியுதவி செய்வதாக கூறி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாகவும், சுமார் 100 சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், உல்லாசத்திற்காக போயஸ் கார்டனில் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா வீடு எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வீரமணி மீதான பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீரமணி மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்துகொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், குற்றச்சாட்டில் தொடர்புடைய எவரும் தப்பிக்காத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை இரண்டு முறை அழைத்து முதல்-அமைச்சர் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விபசார தடுப்பு பிரிவில் இந்த வழக்குக்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.