காவல் நிலைய மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

காவல் நிலைய மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

காவல் நிலைய மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் விசாரணைக்காக மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், அங்கேயே தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது. திரைப்படங்களுக்கு டாப்-10 பட்டியல் வெளியிடுவதைப் போல, தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் பட்டியல் தயாரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. செஞ்சி சிறுமி விவகாரத்தில் இதுவரை காவல்துறையால் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை, காஞ்சிபுரம் டாஸ்மாக் பணம் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களிலும் குற்றவாளிகளைக் கண்டறிய முடியாமல் அரசு திணறி வருகிறது. திரைப்படக் காட்சியாக இருந்தால், குற்றவாளிகளைப் பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு பின்னணி இசையுடன் அதிரடி காட்டியிருப்பார்கள். ஆனால், கற்பனை உலகைக் கண்டு நிஜம் என நம்பி ஆட்சிப் பொறுப்பை வழங்கியது எவ்வளவு பெரிய தவறு என்பதை தவெகவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர். காவல் நிலையத்திற்குள் ஒருவரின் உயிரிழப்பு நிகழும் அளவுக்கு காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டிருப்பது வெட்கக்கேடானது. இதேபோன்று நேற்று பண்ருட்டி பகுதி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட தொடர் நிகழ்வுகள் முதலமைச்சரின் கவனத்திற்குச் செல்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "நீதியும் வரவில்லை, மன்னிப்பும் வரவில்லை. பொறுப்புக்கூறல் என்றால் என்னவென்றாவது முதலமைச்சருக்குத் தெரியுமா?" என்றும் அவர் விமர்சித்துள்ளார். காவல் நிலையங்களில் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.