செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்-அமைச்சர் விஜய், பயிற்சி முடித்த காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 2025-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த 25 டிஎஸ்பிக்கள் தங்களது பயிற்சியை நிறைவு செய்து காவல்துறையில் பணியில் இணைகின்றனர். இவர்களில் 11 பேர் பெண் டிஎஸ்பிக்கள், 14 பேர் ஆண் டிஎஸ்பிக்கள் ஆவர். பயிற்சியை நிறைவு செய்த டிஎஸ்பிக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.