சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மலர் வளையம் வைத்து, பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் பணியின்போது உயிரிழந்துள்ளனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், 21.10.2026 அன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். அங்குள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் முதல்-அமைச்சருக்குக் காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அலுவலக வளாகத்தில் விஜய் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டபோது, தன்னைக் காணத் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்து அவர் விடைபெற்றார். காவலர்களின் தியாகத்தைப் போற்றிய முதல்-அமைச்சர் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் காவல்துறையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டியிருந்தார். 1959-ம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிரிழந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த அவர், நாட்டில் அமைதியையும் சட்டம்-ஒழுங்கையும் பாதுகாக்கும் பணியில் உயிர்நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம் தெரிவித்தார். இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு காவலர்கள் துணிவுடனும் விழிப்புடனும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், கடமையின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தைத் தலைவணங்கி நினைவுகூர்ந்ததுடன், காலநேரம் பாராமல் உழைத்து நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் காவல்துறையினரின் சேவைகளைப் போற்ற வேண்டும் என்றும் தனது பதிவில் வலியுறுத்தினார்.