தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்கத்தை, வரும் 22-ந்தேதி சென்னை திருவான்மியூரில் முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெறும் வகையில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதாக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். இந்த விரிவாக்கத் திட்டத்தின் தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பெரம்பூரில் விழா நடைபெற இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள பள்ளியில் திட்டத்தைத் தொடங்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 22-ந்தேதி திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் பங்கேற்று, மாணவர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயன் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் கூடுதலாகப் பயன்பெறுவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் காலை உணவு திட்டத்தின் மொத்த நிதி மதிப்பு ரூ.724 கோடியாக அதிகரித்துள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியின்றிப் பாடம் படிக்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்க முயற்சி, அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.