அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்ததாகவும், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களிலேயே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை, மின்சாரக் கொள்முதல் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அதைக் கவனிக்க வேண்டிய முதலமைச்சர் விஜய், அரசு ஊழியரைப் போல காலையில் தலைமைச் செயலகத்துக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவதாகக் கூறினார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறையில் இருப்பதாக விமர்சித்த அவர், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை அதிகாரிகளைத் தொடர்புகொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டினார். போதைப்பொருள் பிரச்சினையால் தமிழகம் ஆபத்தான சூழலில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு விஜய் சிறைக்குச் சென்று ஆய்வு நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், அதன்பிறகு 20 நாட்களுக்குள் அங்கிருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றதாகத் தெரிவித்தார். சிறையில் மேற்கொண்ட ஆய்வின் நோக்கம் என்ன என்றும், அது முறையாக நடத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசு திறமையின்றிச் செயல்படுவதாக விமர்சித்தார். தவெக ஆட்சி அமைந்த பிறகு குழந்தைகளும் சிறுமிகளும் அடிக்கடி மாயமாகும் சம்பவங்கள் நிகழ்வதாகவும், அவர்களைக் கண்டுபிடிப்பதில்கூட அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மின்சாரக் கொள்முதல் தொடர்பாகப் பேசிய அவர், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு வாங்கிய ஒப்பந்தத்தை ஊழல் எனக் கூறி ரத்து செய்துவிட்டு, தற்போது ரூ.37-க்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தவெக அரசு மேற்கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதற்கிடையே, நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்றும் அவர் கூறினார். திரைப்படங்களில் நடிப்பதால் தனுஷுக்கும் ரசிகர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விஜய்க்கு அரசியலில் கிடைத்ததைப் போன்ற வாய்ப்பு தனக்கும் கிடைக்கும் என தனுஷ் நம்புவதாகக் கூறினார். எனவே, அவர் கட்சி தொடங்குவதை விமர்சிப்பது பொருத்தமற்றது என்றும் தெரிவித்தார். டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இருவருக்கும் இடையே நல்ல உறவு நீடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். இது தொடர்பாக ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவைச் சந்திக்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்த கேள்விக்கும் அவர் இவ்வாறு பதிலளித்தார்.