காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தை முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் சென்னையில் வரும் 22.9.2026 அன்று தொடங்கி வைக்க உள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று (18.9.2026) முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் அதன் செயல்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், அவர்கள் பசியின்றி பள்ளிக்கு வந்து கல்வியில் முழு கவனம் செலுத்துவதற்கும் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 15.06.2026 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். தற்போதைய விரிவாக்கத்தின் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள் கூடுதலாகப் பயன்பெற உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.217 கோடியே 63 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் மாநகராட்சி நிர்வாகம் காலை உணவு வழங்கும். இதேபோல், பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 2,150 பள்ளிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்கப்படும். ஊரகப் பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே காலை உணவை தயாரித்து வழங்க உள்ளனர். மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை மற்றும் கற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த விரிவாக்கத்தை சென்னையில் வரும் 22.9.2026 அன்று முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். தொடக்கப்பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களும் திட்டத்தில் இணைக்கப்படுவதன் மூலம், அவர்களின் கல்விப் பயணத்துக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில், காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். இவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சூடான, சுவையான, உரிய அளவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், திட்டத்தில் பணியாற்றும் அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.