முதல்முறையாக நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் களமிறங்கியுள்ளன. இரு பிரிவுகளிலும் அணிகள் தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான நேற்று ஆண்கள் பிரிவில் இந்திய அணி உகாண்டாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 44-30 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. பெண்கள் பிரிவிலும் இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 32-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணியும் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்றது.