காதலித்த வாலிபரின் மிரட்டல்: நாளை திருமணம் நடக்க இருந்த கல்லூரி மாணவி தற்கொலை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

காதலித்த வாலிபரின் மிரட்டல்: நாளை திருமணம் நடக்க இருந்த கல்லூரி மாணவி தற்கொலை

காதலித்த வாலிபரின் மிரட்டல்: நாளை திருமணம் நடக்க இருந்த கல்லூரி மாணவி தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், காதலித்ததாக கூறப்படும் வாலிபரின் மிரட்டலால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடியை அடுத்த கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியைச் சேர்ந்த விநாயகம்–அலமேலு தம்பதியின் மகள் ஸ்ரீ தர்ஷினி (20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். ஸ்ரீ தர்ஷினிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்து, மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்திருந்தனர். இதையடுத்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரு குடும்பத்தினரும் திருமண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஸ்ரீ தர்ஷினியை வாலிபர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த அந்த வாலிபர், செல்போனில் அவரை தொடர்பு கொண்டு, தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா எனக் கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரீ தர்ஷினி, விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடும்பத்தினர் தூங்கச் சென்றுள்ளனர். நேற்று காலை பார்த்தபோது, ஸ்ரீ தர்ஷினி படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில், மாணவியை காதலித்ததாக கூறப்படும் வாலிபர் அவரை மிரட்டியதற்கான ஆடியோ இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.