காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி சுங்கச்சாவடியில் வாகனங்கள் எவ்வித தடையுமின்றி கடந்து செல்லும் வகையிலான தானியங்கி கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் அமைந்துள்ள நெமிலி சுங்கச்சாவடியில் இந்த புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்படி, சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த தடுப்புக் கட்டைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக வாகனங்களின் பதிவு எண்களைக் கண்டறியும் நவீன கேமராக்களும், பாஸ்டேக் (FASTag) ஸ்டிக்கர்களை அடையாளம் காணும் சென்சார்களும் நிறுவப்பட்டுள்ளன. இதனால், சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காமல் தொடர்ந்து பயணிக்க முடியும். வாகனங்கள் செல்லும்போது மேலே பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் பதிவு எண்ணையும், பாஸ்டேக் விவரங்களையும் ஸ்கேன் செய்து, தொடர்புடைய வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக் கட்டணத்தைத் தானாகவே வசூலிக்கும். இதன் மூலம் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி பரனூர் சுங்கச்சாவடி முதல் தடையற்ற சுங்கச்சாவடியாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது நெமிலி சுங்கச்சாவடி தமிழகத்தின் இரண்டாவது தடையற்ற சுங்கச்சாவடியாக மாறியுள்ளது. இந்த வசதியால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், எரிபொருள் வீணாவது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடும் கணிசமாகக் குறையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.