காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 8 மற்றும் 12 வயதுடைய இரு குழந்தைகளும் அடங்குவர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆண்டுதோறும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த இளைஞர்கள் உள்ளிட்ட 1,100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக காசா முனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல பணய கைதிகளை இஸ்ரேல் மீட்டது. அதேவேளையில், காசாவில் தொடர்ந்து தாக்குதல்களையும் மேற்கொண்டது. இந்தப் போரில் இதுவரை காசா முனையில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.74 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காசா முனையில் உள்ள பெய்த் லஹியா பகுதியில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு வீடு கடுமையாக சேதமடைந்தது. அந்த வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 12 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் அகமது என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பதிலளித்துள்ளது. இதனிடையே, பாலஸ்தீனிய மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளன. காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ஹமாஸ் அமைப்பு அனைத்து ஆயுதங்களையும் கைவிட்டு சரணடையும் வரை போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.