தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில், பெண்ணின் உறவினரான ஜெயபாலுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 24 வயதான கவின் செல்வகணேஷ், காதல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கொலை சாதிய நோக்கில் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சம்பவம் நடந்தது தொடர்பான விசாரணை முதலில் பாளையங்கோட்டை போலீசாரால் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட சுர்ஜித்தின் தாயாரும், காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியை, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் அவர்கள் இருவரும் கவின் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதேவேளையில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஜெயபால் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜெயபால் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொலைச் சம்பவத்தில் அவர் நேரடியாகப் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்து, ஜாமீன் வழங்குமாறு வாதிட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஜெயபால் சிறையில் இருந்து வருவதையும், வழக்கு விசாரணை மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதையும் கருத்தில் கொண்ட நீதிபதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். இதன்படி, ரூ.20 ஆயிரத்திற்கான சொந்தப் பத்திரம் மற்றும் இரண்டு பிணையதாரர்களின் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும், ஜாமீனில் வெளிவரும் ஜெயபால் கொலை நடந்த கிராமத்திற்குச் செல்லக் கூடாது என்றும், புகார்தாரரைத் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, தினமும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் ஜெயபாலுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.