தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (24), காதல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கொலை சாதியப் பின்னணியில் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரை போலீசார் முதற்கட்டமாகக் கைது செய்தனர். தொடர்ந்து, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும் காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தொடக்கத்தில் பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார். இதன் மூலம் சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் கவின் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதேவேளையில், குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஜெயபால் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜெயபால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், வழக்கு விசாரணை மேலும் தாமதமடைய வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு, ஜெயபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் இருவர் மீதான குற்றப்பத்திரிகையும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.