காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (செப்.18) காலை 6 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று படிப்படியாக உயர்ந்து மாலை நேரத்தில் 10 ஆயிரம் கனஅடியை எட்டியது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி அது 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செந்நிறத்தில் கொட்டுகிறது. தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து மாறுபட்டு வருவதால், பரிசல் இயக்குவதற்கான தடை இன்று 6-வது நாளாகவும் நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.