கோயம்புத்தூர் காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தின் 4-வது தளத்தில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் சுமார் 2,000 புத்தகங்கள் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளன. கோவை காந்திபுரத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த நூலகத்தின் 4-வது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவில், ‘அகல்விளக்கு பதிப்பகம்’ வெளியிட்ட 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக அண்மையில் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி நூலகத்தைப் பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஆய்வு செய்தார். அப்போது, பல நூல்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் வரலாறு தொடர்பான தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இந்தப் புகார்களின் அடிப்படையில், நூல் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) நூலகத்தின் 4-வது தளத்தில் அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கு பதிப்பகத்தின் சுமார் 2,000 புத்தகங்களை அதிகாரிகள் அகற்றினர். மேலும், பீனிக்ஸ் பதிப்பகத்தைச் சேர்ந்த புத்தகங்களும் நூலகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கை கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.