கள்ளக்குறிச்சி விவகாரம்: தவெக எம்.எல்.ஏ. மீது இன்னும் ஏன் நடவடிக்கை இல்லை? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
11 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கள்ளக்குறிச்சி விவகாரம்: தவெக எம்.எல்.ஏ. மீது இன்னும் ஏன் நடவடிக்கை இல்லை? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

கள்ளக்குறிச்சி விவகாரம்: தவெக எம்.எல்.ஏ. மீது இன்னும் ஏன் நடவடிக்கை இல்லை? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது வருத்தமளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பெண் மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ. மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகத் தெரிகிறது. கஞ்சா மற்றும் நம்பர் லாட்டரி விற்பனை மாநிலம் முழுவதும் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. கடந்த 6 மாதங்களாக மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தும் ஆட்சியாகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஆறு மாதங்களில் சிறப்பான ஆட்சியை வழங்குவோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது மக்களுக்கு துயரத்தை அளிக்கும் ஆட்சியே நடைபெறுகிறது. தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. தீபாவளி தினத்தன்று மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளன. இதனை அமைச்சர் ராஜ்மோகன் முந்தைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கொலைகளுடன் ஒப்பிட்டுப் பேசியது ஏற்கத்தக்கதல்ல. பொருளாதாரம் போன்றவற்றை ஒப்பிட்டுப் பேசலாம். ஆனால், கொலைச் சம்பவங்களை முந்தைய ஆண்டுகளின் நிகழ்வுகளுடன் ஒப்பிடுவது சரியான அணுகுமுறை கிடையாது. கொலைகள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது. எடப்பாடி நகரில் சமீபகாலமாக ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். இதனைத் தடுக்க அரசு மற்றும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற தவெக அரசு தவறிவிட்டது. மேகதாது அணை தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் எந்த விளக்கமும் அளிக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. பெண் மாவட்ட கலெக்டருக்கு தவெக எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினார். இந்தச் சம்பவத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவறு செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.