கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி: தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி: தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி: தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி பகுதியில் உள்ள தோட்டத்தில், கடந்த 10-ம் தேதி ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து இலத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். துணை சூப்பிரண்டு அதியமான் தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடும் பணி நடைபெற்றது. பண்பொழி-தென்காசி சாலையில் பொருத்தப்பட்டிருந்த 26 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்திற்கிடமான வகையில் குறிப்பிட்ட பகுதியில் இரண்டு முறை சென்று வந்த காரின் பதிவு எண் கிடைத்தது. விசாரணையில் அந்த கார் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வாடகை கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 10-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (50) என்பவரை, தென்காசி மாவட்டம் தைக்கா தெருவைச் சேர்ந்த இசை இந்திரகுமார் (36) என்பவர் அந்த வாடகை காரில் பண்பொழிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. இசை இந்திரகுமாரை பிடித்து விசாரித்தபோது, வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அப்துல் ரகுமான் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடைகளுக்கான ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அவருக்கு அம்சா நிஷா (43) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இசை இந்திரகுமார் பணியாற்றி வந்த ஓட்டலுக்கு அப்துல் ரகுமான் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இசை இந்திரகுமாருக்கும் அம்சா நிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது கள்ளத்தொடர்பாக மாறியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. சமீப காலமாக அப்துல் ரகுமான் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் தங்களது தொடர்புக்கு அவர் இடையூறாக இருப்பதாக கருதிய இசை இந்திரகுமாரும் அம்சா நிஷாவும் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். திட்டமிட்டபடி, கடந்த 10-ம் தேதி பண்பொழி-தென்காசி சாலையில் உள்ள தனது நண்பரின் தோட்டத்தில் பம்புசெட் கட்டிடத்திற்கு ரோலிங் ஷட்டர் அமைக்க வேண்டியிருப்பதாக கூறி, அப்துல் ரகுமானை இசை இந்திரகுமார் வாடகை காரில் அழைத்துச் சென்றுள்ளார். இருவரையும் தோட்டத்தில் இறக்கிவிட்ட பின்னர் கார் டிரைவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அங்கு ரோலிங் ஷட்டர் அமைப்பதற்காக இடத்தை அளவிட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் அப்துல் ரகுமானின் தலையின் பின்பகுதியில் இசை இந்திரகுமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் கீழே விழுந்த நிலையில், அவர் மீது கல்லை தூக்கிப் போட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அப்துல் ரகுமான் உயிரிழந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இசை இந்திரகுமார் அங்கிருந்து நடந்து சென்று பேருந்தில் ஏறி தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக இசை இந்திரகுமார் மற்றும் அம்சா நிஷா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் இசை இந்திரகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், அம்சா நிஷா கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். கடையநல்லூர் அருகே கள்ளத்தொடர்பு காரணமாக கணவரை மனைவியே மற்றொருவருடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.