கல்குவாரிகளை நிரந்தரமாக மூடக் கோரி விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

21 Jul 2026 www.thinathulir.com

கல்குவாரிகளை நிரந்தரமாக மூடக் கோரி விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதம்

கல்குவாரிகளை நிரந்தரமாக மூடக் கோரி விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதம்

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் 40-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில, அரசின் அனுமதி காலம் நிறைவடைந்த பிறகும் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.கல்குவாரிகளின் செயல்பாடுகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் வறண்டு வருவதுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக கனிம வளத்துறை மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், நம்பர் 10 முத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம், அனைத்து கல்குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிணத்துக்கடவு பகுதியில் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் பல கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும், அதிக அளவில் வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதாகவும் கூறினார். இதன் காரணமாக கிணறுகள் வறண்டு, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் தலைமைச் செயலர், கனிம வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு அளித்ததாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட போதிலும், மாவட்ட நிர்வாகம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் விவசாயம் மட்டுமல்லாமல், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளதாக தெரிவித்த முருகானந்தம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் நிரந்தரமாக மூடும் வரை தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றார்.இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, முருகானந்தம் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.