கரூர் மாவட்டத்தில் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உயிரிழப்பில் உரிய விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். கரூர் மாவட்டம், கொசூர் அருகே உள்ள தந்தரிபட்டி பகுதியைச் சேர்ந்த முனியப்பன் - தங்கமணி தம்பதியின் மகள் முத்துலட்சுமி என்ற ரம்யா. இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், கரூர் வடிவேல் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மாணவியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் நர்சிங் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தனர். மாணவியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேதப் பரிசோதனை முடிந்ததைத் தொடர்ந்து, மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.