கரூரிலேயே விஜய்யை முடித்திருக்கலாம் என பேசிய திமுக கவுன்சிலர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
28 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கரூரிலேயே விஜய்யை முடித்திருக்கலாம் என பேசிய திமுக கவுன்சிலர் கைது

கரூரிலேயே விஜய்யை முடித்திருக்கலாம் என பேசிய திமுக கவுன்சிலர் கைது

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி, சிஎம்டிஏ உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சிறை வாசலில் திரண்ட திமுகவினர், தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அந்த நேரத்தில், வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் டிட்டா சரவணன், தமிழக முதலமைச்சர் விஜய்யைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், “தைரியமாக இருங்க தலைவரே... நம்ம வெளியே வந்துவிடலாம். அன்றைக்கே அவனை கரூரில் வைத்து போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று ஆவேசமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதே கருத்தை அருகில் இருந்த மற்றொருவரிடமும் அவர் தெரிவித்தார். டிட்டா சரவணன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவரது கருத்துக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுதொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், கரூரிலேயே விஜய்யை முடித்திருக்கலாம் எனப் பேசியதாகக் கூறப்படும் திமுக கவுன்சிலர் டிட்டா சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவுக்குச் செல்வதுபோல் போலீசாரிடம் திசைதிருப்பிவிட்டு, விழுப்புரத்தில் பிரேம் என்பவரின் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிட்டா சரவணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏசிகே பிரேம்குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.