கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்குவதற்காக ரூ.603.34 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கரும்புக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்திருந்தார். இதன்படி, 2025-26ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசின் நிதியில் இருந்து ரூ.603.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டு அரவைப் பணியை மேற்கொண்டுள்ள 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 15 தனியார் என மொத்தம் 29 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 9.5 சதவீத சர்க்கரைக் கட்டுமானத்துக்கான மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலை ரூ.3,290.50 ஆக உள்ளது. இதனுடன் தமிழக அரசின் ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையும் சேர்த்து, விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரைக் கட்டுமானம் 9.5 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் கரும்புக்கு, அதற்கேற்ப ரூ.4,000-க்கும் கூடுதலான விலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையின்படி, 01.10.2025 முதல் 30.09.2025 வரை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் கரும்பு எடை, ஆதார் எண், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுக்கள் தகுதியான விவசாயிகளை பரிந்துரைத்த பின்னர், சர்க்கரைத்துறை இயக்குநரகம் அவற்றை ஆய்வு செய்து சிறப்பு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஒத்திசைவு செய்யப்பட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தும் முறையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தீபாவளி முதல் பணப்பரிவர்த்தனை தொடங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 90,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.