கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 35வது லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் என 7 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், இன்று நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்படோஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த கயானா அணியால் 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் தொடக்க வீரர் பிலிப்ஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். பார்படோஸ் அணியின் பந்துவீச்சில் ஜொஹன் லெனி மற்றும் கசன்பர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 100 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பார்படோஸ் அணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பிரண்டன் கிங் 44 ரன்கள் விளாசினார்.