தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியை போராட்டம் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து அரசு நீக்கியுள்ளது. மேலும், ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளை மீறி கட்சியின் நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் ஜந்தர் மந்தர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டிச் சென்றனர். ஏற்கெனவே அளித்திருந்த உறுதிமொழியை மீறி, ஜந்தர் மந்தர் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறி சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய இருவருக்கும் ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, பண்டிகைக் காலத்தில் போராட்டம் நடைபெறுவதால் தங்களது வியாபாரமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக் கூறி, கன்னாட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து, அந்த வியாபாரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தது. அதேநேரத்தில், போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். வணிகர்களைப் பாதிக்கும் வகையில் சட்டவிரோதமான சூழல் உருவானால், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.