உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை "கரப்பான் பூச்சிகள்" என விமர்சித்ததாக கடந்த மே மாதத்தின் நடுப்பகுதியில் செய்திகள் வெளியானது. இந்த தகவல் பல இளைஞர்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அபிஜீத் திப்கே என்ற இளைஞர், மே 16ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் 'கரப்பான் ஜனதா கட்சி' என்ற பெயரில் நையாண்டி இயக்கத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் சமூக ஊடக முயற்சியாக இருந்த இந்த இயக்கம், மிகக் குறுகிய காலத்தில் வேகமாக பரவி, 3 கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் வசித்து வந்த அபிஜீத் திப்கே, ஜூன் 6ஆம் தேதி இந்தியா திரும்பிய பிறகு நேரடி போராட்டங்களை முன்னெடுத்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதையும் சேர்த்து ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கென தனி இணையதளமும் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜூன் 20ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரம்பற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் ஜூன் 28ஆம் தேதி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்குடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் போராட்டம் மேலும் தீவிரமடைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் டெல்லிக்கு திரளத் தொடங்கினர். ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் ஜனதா கட்சியினர் பேரணியாக சென்றபோது நிலைமை முக்கிய திருப்பத்தை எட்டியது. மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்ததுடன், ஜந்தர் மந்தரில் மொழி, மதம், இனம், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடியனர். டெல்லியில் தொடங்கிய இந்த போராட்டம் பின்னர் மும்பை, சென்னை, கொல்கத்தா, பாட்னா உள்ளிட்ட பல நகரங்களுக்கும் பரவியது. மாணவர்களின் எதிர்ப்பை சமாதானப்படுத்த பிரதமர் நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் தோன்றும் சூழலும் உருவானதாக கூறப்படுகிறது. இதேவேளை, பல்வேறு அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தன. நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். சுதந்திர இந்தியாவின் சுமார் 80 ஆண்டுகால வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாணவர் இயக்கங்களில் ஒன்றாக இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது.